Tuesday, 22 March 2016

மருது பாண்டியர் வரலாறு


சகோதரர்கள் ஆவர். இவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய சுதந்திரப்
போராட்ட வீரர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
பெரியமருது பாண்டியர் 1748-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தற்போதுள்ள
விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற
கிராமத்தைச் சேர்ந்த உடையார் தேவர்  என்ற மொக்க பழநியப்பன் தேவர்  – ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். 
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753-ம் சின்ன மருது பாண்டியர் பிறந்தார்.
இவர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்றும்
அழைக்கப்பட்டார். அவரை விட சின்ன மருது உயரத்தில் சிறியவராக இருந்ததால்
இளைய மருது என்றும் சின்ன மருது பாண்டியர் என்றும்  அழைக்கப்பட்டார்.

அரச சேவை :-
சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

இவர்கள் இருவரும் சிவகங்கை அரசர் முத்து வடுகநாத தேவரின் போர்ப்படையில் வீரர்களாக சேர்ந்து தங்கள் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை
கண்டு மெச்சிய முத்து வடுகநாத தேவர் மருது சகோதரர்களை தன் படையின்
முக்கிய பொறுப்புகளில் அமர்த்தினார்.
கர்னல் வெல்ஷ் என்ற ஆங்கில ராணுவ அதிகாரி தனது “இராணுவ நினைவுகள்” நூலில்
மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும்
தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும்
சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர்
ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர்.
ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில்
நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது
சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர்
அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும்
உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்” என்று கர்னல் வெல்ஷ் கூறுகிறார்.
தனக்கு வேல் பிடிக்கவும், களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன
மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர்
வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து
சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும்
மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின்
கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால்
தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து.
பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க
அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை
விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு
என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத்
தளர்த்தும் வாய்ப்பு – எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு – கிடைத்தது.
அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத்
தப்பவைக்க முடியவில்லை.”
உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள்
கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில்
சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.
ஆற்காடு நவாப் தமிழகத்தில் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக
ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் அடிப்படையில் 1772-ம் ஆண்டு  ஜோசப்
ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது.
அப்போது தாக்குதலை எதிர்பாராமல் இருந்த மன்னர் முத்து வடுகநாத தேவர்
காளையார் கோவில் போரில் பலியானார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார்,
மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருது சகோதரர்கள்
திண்டுக்கல் அருகே விருப்பாச்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
1772-ம் ஆண்டுக்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள்
தமது கிளர்ச்சியை  தொடங்கினார்கள். அவர்கள் 1780-ம் ஆண்டு ஆற்காட்டு
நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டனர்.
அவர்கள் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில்
அமர்த்தினர்.
இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை
பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு
போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்தஹைதர்
அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில்
அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.
மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக்
குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச்
சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள்
காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டினர். குன்றக்குடி, திருமோகூர்
கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.
இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார்.
அவர் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத்
துவக்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டார்.
1801-ம் ஆண்டு ஜுன் 12-ம் தேதி சின்ன மருது திருச்சி, திருவரங்கம் முதலிய
இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என
அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப்
பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயர்க்கு எதிராகப்
போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுத்தது.
1801-ம் ஆண்டு மே 28-ம் தேதி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு
அடைக்கலம் கொடுத்த காரணத்தைக் கூறி ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர்
150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. இறுதியில் மருது பாண்டியர்கள்
தூக்கிலிடப்பட்டனர்.
1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி வெள்ளையர்கள், மருது பாண்டியர்களை
தூக்கிலிட்டபோது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 500-க்கும்
மேற்பட்டோரையும் தூக்கிலிட்டனர்.
மருது பாண்டியர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை
வழங்கியதோடு இறைபணியிலும் சிறப்பாக ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இந்து மத
கோவில்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கும் உதவி செய்ததை வரலாறு
கூறுகிறது. மருதுபாண்டியர் மேற்கொண்ட இறைபணிக்கு சில எடுத்துக் காட்டுகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மருது சகோதரர்களின் கோயில் பணி
மருது சேர்வைகளின் நாட்டுப்  பணிகள் ஏராளம். மக்கள் பணியில் அவர்கள்
மிகச்சிறந்து விளங்கியதோடு இறை பக்தியிலும் எவரும் மிஞ்சமுடையாத அளவில்
இருந்தனர் நம் மருது பாண்டியர்கள். “மருது பாண்டியர்கள் சரணடையவில்லை
என்றால் காளையர் கோவிலை இடித்து விடுவோம்” என்று வெள்ளைக்காரர்கள்
எச்சரிக்கவே எம்முயிரை விடக் கோவில்களே முக்கியமென்று கருதி சரணடைந்து
தூக்குமேடை ஏறிய உத்தமர்களே மருது சேர்வைகளென்பது குறிப்பிடத் தக்கது.
அவர்கள் ஆற்றிய இறைப்பணிகளும் கட்டிய ஏராளம். அவற்றுள் குறிப்பிடத்
தக்கவை இவை.
அழயான் குளம் பிள்ளையார் கோவில்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6
கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு
பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால்
கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும்
குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய
கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய ராஜ கோபுரம் கட்டிச்
சிறப்பித்துள்ளனர்.
அக்கோபுரத்தைக் கட்டுவதற்கு மானாமதுரையிலிருந்து செங்கற்கள்
கொண்டுவரப்பட்டன. அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரைக்
கோபுரம்தெரியும். மானாமதுரையில், கருமலை என்ற இடத்தில் செங்கற்கள்
எடுத்து மருது சகோதரர்கள் அக்கோபுரம் கட்டியதன் சிறப்பையும் அருமையையும்
ஒரு நாட்டுப்புறப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“கருமலையிலே கல்லெடுத்துக் காளையார் கோயில் உண்டு பண்ணி மதுரைக் கோபுரம் தெரியக்
கட்டிய மருதுவாரதைப் பாருங்கடி.”
அக்கோயிலின் வெளிப்புறத்தின் கிழக்குப் பகுதியின் பழைய வாயிலுக்கு
எதிரில் மருது சகோதரர்களின் சமாதிகள் உள்ளன. பழைய கோபுரத்தின் உள்ளே
கருங்கல்லால் வடிக்கப்பட்ட அவர்களின் இருவரின் திருவுருவம் கோயிலில்
வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதம் 24 மற்றும் 27தேதிகளில்
அவர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
குன்றக்குடி கோயில்: குன்றக்குடி மலை மேல் கோபுரமும் மண்டபமும்
கட்டியுள்ளனர். அங்குள்ள மருதாபுரி என்னும் குளமும் மருது சகோதரர்கள்
வெட்டியதே ஆகும். அக்கோயிலில் அவர்களின் சிலைகள் பெரிய அளவில்
இருக்கின்றன. அக்கோயிலிலுள்ள முருகனுக்குச் சாத்தப்படும் பொற்கவசத்தில்
‘சின்னமருது உபயம்” என்னும் சொற்கள் காணப்படுகின்றன.
சருகணி மாதா கோயில்: சருகணியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தைத் திறம்பட
நடத்துவதற்காக அச்சிற்றூரை மருது சகோதரர்கள் முழுமையாக அக்கோவிலுக்கு
தானமாக வழங்கினர். அங்கு நடைபெறும் தேரோட்டத்துக்குரிய செலவுகள்
அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இப்போதும் திருவிழாக் காலங்களில்
மருது சகோதரர்களின் குடிவழியினருக்கு முதல் மரியாதை அளித்த பின்னரே
தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை திருஞான சுப்பிரமணியார் கோயில்:சிவகங்கையில் உள்ள திருஞான
சுப்பிரமணியார் கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயில்
கட்டப்பட்டதற்கு ஒரு வரலாறு உள்ளது. சிவகங்கைப் பாளையத்தின் இரண்டாம்
அரசர் முத்துவடுகநாத தேவர் பட்டத்தரசி வேலுநாச்சியாருக்கு நெடுநாள்களாக
மகப்பேறு இல்லாதிருந்தது. அரசரின் கடைசிநாளில் ஒரு பெண் குழந்தை
பிறந்தது. பிள்ளைப் பேறுண்டானால் கோயில் ஒன்று கட்டுவதாக முத்துவடுகநாத
தேவர் இறைவனை வேண்டியிருந்தார்.
ஆனால் எதிர்பாராமல் 25-6-1772 அன்று நடந்த போரில் அவர் இறந்துவிடவே
கோயில் கட்ட இயலாமல் போய்விட்டது. அரசரின் அவ்வேண்டுதலை அறிந்தமருது
சகோதரர்கள் அக்கோயிலைக் கட்டி முடித்ததாகச் சொல்லப்படுகிறது. அக்கோயிலின்
முன்மண்டபத்தில் இடப்புறம் உள்ள முதல் தூணில் இச்செய்தியை
உறுதிப்படுத்துவதற்குரிய கல்வெட்டு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
திருமோகூர் கோயில்: திருமோகூர் என்ற வளர் மதுரையில் இருந்து திருச்சி
செல்லும் ரோட்டில் ஒத்தக்கடை என்ற ஊரில் இருந்து பிரிந்து செல்லவும்
ரோட்டில் 3 கல் தொலைவில் உள்ளது. அங்கு காளமேகப் பெருமானுக்கு இரண்டு
கோயில்கள் இருக்கின்றன. அக்கோயிலின் முகப்பு முன் உள்ள மண்டபம் மருது
சகோதரர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அக்கோயில் முன்பு மருது சகோதரர்களின் சிலைகள் இருக்கின்றன. மருது சிலைகள்
மிகவும் உயரமாகவும், கம்பீரமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகுடன் உள்ளது.
ஆனால் தூசு படிந்து யாரும் பராமரிக்கப்படாமல் உள்ளது. அக்கோயிலில் பூசை
செய்வதற்காக மாங்குடி, மானாகுடி ஆகிய சிற்றூர்களை தானமாகக் கொடுத்ததாகத்
தெரிகிறது.
நரிக்குடி கோயில்: மருது சகோதரர்கள் தம் சொந்த ஊரான நரிக்குடியில் இரண்டு
கோயில்களைக் கட்டினர். ஒன்று அன்னதான மருகி விநாயகர் கோயில், இன்னொன்று
அழகிய மீனாம்பிகை கோயில். பாண்டியன் கிணறு என்னும் பெயரில் ஒரு
கிணற்றையும் வெட்டி உள்ளனர்.
வீரக்குடி கோயில்: வீரக்குடியில் உள்ள முருகன் கோயிலில் முன்புறத்தில்
பெரிய மருதுவின் சிலை ஒன்று உள்ளது. எனவே அக்கோயிலைப் பெரிய மருது
கட்டியதாகச் சொல்கிறார்கள்.
திருக்கோட்டியூர் கோயில்: மருது சகோதரர்கள் திருக்கோட்டியூரில் உள்ள
தலத்தையும் குளத்தையும் புதுப்பித்து இறைவனுக்கு தேர்
ஒன்றினையும்செய்தளித்துள்ளனர்.
திருப்பத்தூர் கோயில்: திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில் மருது
சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயிலில் திருத்தலைநாதர்,
சிவகாமியம்மன் திருவுருவங்கள் உள்ளன. அக்கோயிலுக்கு உள்ளே வைரவன் கோவில்
உள்ளது. அக்கோயில் மண்டபத்தில் பெரிய மருது, சின்ன மருது சிலைகள் உள்ளன.
அக்கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் குன்றக்குடி
ஆதினத்திற்கு சொந்தமானது.

1 comment:

  1. Bet365 Casino | No Deposit Bonus | Baccarat for UK Players
    Bet365 Casino is an online casino and mobile sportsbook that offers a safe and secure environment to play all your favourite 바카라 sports and casino games.‎Live 인카지노 Betting · ‎Join Now · ‎Poker · หาเงินออนไลน์ ‎Promotions

    ReplyDelete